×

மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து பஞ்சாப் அரசு வழக்கு ஆளுநர்கள் ஆட்சியாளர்கள் அல்ல: மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை உணர வேண்டும்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கிடப்பில் போட்டதை எதிர்த்து பஞ்சாப் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என கூறினார். பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அங்கு ஆளும் அரசுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவது, மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது என ஆளுநர்கள் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் 2 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கேரள மாநில அரசும், அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வரிசையில் பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டது, சட்டப்பேரவையை கூட்ட மறுப்பது போன்ற ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

பஞ்சாப் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘மாநில அரசு சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கிறது. ஆனால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் அதனை திருப்பி அனுப்புவது, எந்த ஒரு முடிவும் எடுக்காமல் நிலுவையில் போட்டு வைப்பது போன்ற செயல்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஈடுபட்டு வருகிறார். இது எந்த விதத்திலும் ஏற்புடையது கிடையாது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காததால் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் எட்டு மசோதாக்கள் மற்றும் தமிழ்நாட்டில் 12க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது’’ என தெரிவித்தார்.

ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ஆளுநர்களால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்படுவது, அது நிலுவையில் வைக்கப்படுவதற்கான காரணங்கள் அவ்வப்போது மாநில அரசுகளிடம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது’’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘அப்படி என்றால் ஆளுநருக்கு எதிராக எதற்காக மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறார்கள். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு ஆளுநர் நிலுவை மசோதா விவகாரத்தில் உடனடியாக செயல்படுகிறார். இவ்வாறு நடைபெறக்கூடாது. இதுபோன்ற விவகாரங்கள் எல்லாம் ஆளுநர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு இடையே பேசி முடிவடைந்து விட வேண்டும்’’ என கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், ‘‘சட்டப்பேரவையில் இருந்து ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களை ஆய்வு செய்யவும், அதனை நிலுவையில் நிறுத்திவைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும் இதுபோன்ற விவகாரங்களில் ஆளுநர்கள் தங்களுக்கான பணிகளை மட்டும் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் கிடையாது என்பதை உணர வேண்டும். குறிப்பாக ஆளுநர் என்பவர் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டும்.

மேலும் அவர் மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். இருப்பினும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள் வழக்கு தொடர்வது மிகவும் வேதனை அளிக்கிறது. பஞ்சாப் அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் அம்மாநில அரசு தொடர்ந்துள்ள மனுவுக்கு, பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கான அடுத்த மூன்று தினத்தில் அவரது பதிலை அறிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

* தமிழ்நாடு அரசு வழக்கு 10ம் தேதி விசாரணை
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை திட்டமிட்டபடி வரும் 10ம் தேதி விசாரிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். தமிழ்நாடு அரசின் முறையீட்டை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்த வழக்கு வரும் 10ம் தேதி விசாரிக்கப்படும் என உறுதியளித்தார்.

The post மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து பஞ்சாப் அரசு வழக்கு ஆளுநர்கள் ஆட்சியாளர்கள் அல்ல: மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை உணர வேண்டும்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Punjab government ,Supreme Court ,Chief Justice ,Gatham ,New Delhi ,Punjab State Government ,Governor ,Banwaril ,Legislative Assembly ,Kadam ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...